அடுத்த 2 மணி நேரம்.. திருவள்ளூர் முதல் குமரி வரை 23 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், திருவள்ளூர் முதல் குமரி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று பகல் முழுவதும் 105 டிகிரி வரை வேலூரில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கோடைக்கால சீசன் நடந்து வரும் நிலையில், இடையிடையே மழையும் பெய்து வருகிறது. கோவை உள்பட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மதியம் வரை வெயில் அடித்தாலும் அதன் பிறகு மழை கொட்டுகிறது.

வேலூரில் வெயில் + மழை
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மாலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (10-04-2025) காலை 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியிருந்தது. அதற்கு ஏற்றார்போலவே தென்காசி மாவட்டத்தில் இன்று பெரிய அளவில் வெயில் இல்லை. காலையில் அனலை கக்கிய வெயில், மதியத்திற்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வேலூரில் இன்று அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வாட்டி எடுத்த நிலையில், இரவு 7 மணியளவில் திடீரென மழை பெய்து வருகிறது.
இதனால் காலையில் வெயிலால் வெளியே செல்ல முடியாமல் தவித்த மக்கள் தற்போது பெய்த மழையினால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இடி மற்றும் மின்னலுடன் வேலூர், திருவண்ணாமலையில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
23 மாவட்டங்கள் என்னென்ன
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 11 மணி வரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று இன்று இரவு 11 மணி வரை, தமிழகத்தில் குமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு என 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது;- நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் கிளைமேட் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications