அடுத்த 2 மணி நேரம்.. இடி, மின்னலுடன்.. கடலூர், திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், கடலூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடலூரில் தற்போது தான் வெள்ளம் வடிந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் மழை பெய்யும் என்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. இந்த மாதத்தில் தென் மாநிலங்களில் இயல்பை விட கூடுதலாக 31 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து சுமார் 6 மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை.

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இன்று கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் இன்று பெரிதாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், கடலூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி ஆகிய 10 மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கான அப்டேட்டில், "நேற்று (02-12-2024) காலை வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் நிலவியது. இது இன்று (03-12-2024) காலை கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இதனால், இன்று தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் டிச. 5 முதல் டிச. 9ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32°செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications