அடுத்த 3 மணி நேரம்.. இடி, மின்னலுடன் 13 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது மழை.. ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கும், நெல்லை, தென்காசி, குமரி, கோவை, சேலம், சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கோவை சின்னக்கல்லாரில் மட்டும் நேற்று ஒரே நாளில் 9 செமீ மழை பெய்தது. கோவை வால்பாறையில் 8 செமீட்டரும், நீலகிரி பார்சன் பள்ளத்தாக்கு பகுதியில் 7 செமீட்டரும் மழை பெய்துள்ளது.

13 மாவட்டங்களுக்கு அலர்ட்
இதேபோன்று தேனி மாவட்டம், குமரி, நெல்லை, தென்காசி பகுதிகளில் மழை கொட்டியது. இன்று மதியம் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை நீலகிரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையினையும், நெல்லை, தென்காசி, குமரி, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
இன்று கனமழை பெய்யும் இடங்கள்
மேலும் இந்த மாவட்டங்களில் மழையின் காரணமாக ஒருசில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கலாம் என்றும் இதனால் சில இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. முன்னதாக இன்று மதியம் சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று புதன்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
நாளை வியாழக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் களமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 1 ஆம் தேதி வரை
27-06-2025 மற்றும் 28-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சுனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
29-06-2025 முதல் 01-07-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்றும், நாளையும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (26-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications