அடுத்த 1 மணி நேரம்.. வெயிலே இருக்காது.. 4 மாவட்டங்களுக்கு குளுகுளு அப்டேட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இனி ஒரு வாரத்திற்கு லேசான மழை பெய்யவே வாய்ப்பு என்றும், வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ள நிலையில், இன்று மாலை 4 மணி வரை நெல்லை, தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகமாக வெயில் கொளுத்தி எடுத்தாலும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில் தலா 5 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. சென்னை, நாமக்கல், கோவை, நீலகிரி, தஞ்சை, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது.

இன்று 4 மணி வரை
தமிழகத்தில் இன்று காலையில் இருந்து பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் மாலை 4 மணி வரை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒருசில இடங்களில் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கும் அபாயம் இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த ஒரு வார கிளைமேட்
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 21-06-2025 மற்றும் 22-06-2025, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23-06-2025 முதல் 27-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை எப்படி?
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை, இன்று 21-06-2025 மற்றும் 22-06-2025: தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். 21-06-2025 மற்றும் 22-06-2025: தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 21-06-2025 மற்றும் 22-06-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (21-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (22-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications