சென்னையில் வடிந்த வெள்ளம்.. வடியாத சோகம்.. நோய் தொற்று அச்சம்.. களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்
சென்னை: மழை வெள்ளம் வடிந்த பகுதிகளில் சேரும் சகதியுமாக காணப்படுவதால் நோய் தொற்று பரவும் அச்சம் எழுந்துள்ளது. மழை வெள்ளம் பாதித்த மக்களுக்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் நாளை மறுநாள் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்த மழையால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. வெள்ளத்தில் பலரது வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு விட்டன. உடமைகள் நீரில் மூழ்கி வீணாகி விட்டது. உயிர் பிழைத்தவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். ஒரே நாளில் அனைத்தையும் பறிகொடுத்து விட்டு நிர்கதியாக நிற்கின்றனர் சென்னைவாசிகள்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தவர்கள் குடிநீர் இன்றியும், உணவு, பால் இன்றியும் பல நாட்கள் தவித்துள்ளனர். ஒருசில பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் புறநகரில் சில பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வட சென்னையில் மழை நீருடன், கழிவு நீர் கலந்ததோடு கச்சா கழிவு எண்ணெய் கலந்து மக்கள் வசிக்கவே தகுதி இல்லாத இடமாக மாறி விட்டது. நோய் தொற்றும் பரவி வருகிறது. இந்த சூழலில் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக இயங்க தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது. "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 'மிக்ஜாம்' புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர் துடைப்போம்" என அந்த பதிவில் விஜய் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அன்னதானம் அளித்தனர்.
மழை வெள்ள நீர் வடிந்தாலும் பல பகுதிகளில் சேரும் சகதியும் காணப்படுகிறது. பல ஆயிரம் டன் குப்பைகள் சென்னையிலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் அகற்றப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி தொந்தரவுகளினால் சிரமப்படுபவர்களுக்காக விஜய் மக்கள் இயக்கத்தினர் மருத்துவ முகாம்களை நடத்த உள்ளனர். நாளை மறுநாள் 14ஆம் தேதியன்று வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னையில் 25 இடங்களில் மருத்துவ முகாம்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நிலையில் மக்கள் நலத்திட்டப்பணிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications