3 நாட்களாக கரண்ட் கட்.. உணவு, குடிநீருக்காக தவிக்கும் மக்கள்.. தண்ணீர் தேசமான செம்மஞ்சேரி
சென்னை: மழை நின்று இரண்டு நாட்கள் ஆன பின்னரும் பெருவெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் செம்மஞ்சேரியில் குடிநீர், உணவு உள்ளிட்ட எந்தவிதமான அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டு தண்ணீர் தேசமாக மாறியுள்ளதால் தனி தீவில் வசிப்பது போல உணர்வதாக மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
சென்னை கூவம் ஆற்றின் கரையோரம் இருந்த மக்களும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களும் குடிசை மாற்று வாரியத்தால் சென்னைக்கு வெளியே செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். செம்மஞ்சேரி பகுதிகளில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. ஐடி நிறுவனங்கள், கல்லூரிகளில் வேலை செய்பவர்களும் செம்மஞ்சேரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வீடுகளை கட்டி குடியேறி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தின் போதும் அதிகம் பாதிக்கப்படுவது செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகள்தான். மிக்ஜாம் புயல் கொடுத்த மழையால் எங்கும் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம், குடிநீர் இன்றி தவித்து வரும் தங்களுக்கு எந்த வித உதவியும் இதுவரை கிடைக்கவில்லை என்று செம்மஞ்சேரி பகுதி மக்கள் எக்ஸ் வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஊரெங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்க குடிப்பதற்குக் கூட தண்ணீர் இன்றி தவிப்பதாகவும், குழந்தைகளுக்கு பால் வாங்கிக் கொடுக்கக் கூட முடியவில்லை. வீட்டில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியிருப்பதாகவும் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் செம்மஞ்சேரி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போது பெருமழை பெய்தாலும் செம்மஞ்சேரியில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. இந்த பிரச்சினையை சீரமைக்கவே செம்மஞ்சேரி கால்வாய், ஒட்டியம்பாக்கம் ஓடை மற்றும் மதுரப்பாக்கம் ஓடைகளில் ரூ.165 கோடியில் வெள்ளம் கடத்தும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் துரைமுருகன் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். அந்த பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மற்றும் வண்டலூர் வட்டத்தில் உள்ள மதுரப்பாக்கம் ஓடை மற்றும் ஒட்டியம்பாக்கம் ஓடை முக்கியமான வெள்ள வடிகால்வாய் ஆகும். இவ்வோடைகள் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கிடைக்கப்படும் ஏரிகளின் உபரிநீர் மற்றும் மழைநீர் வடிந்து மேற்கண்ட கால்வாய்கள் வழியாக பள்ளிக்கரணை கழுவெளி சென்றடையும் வகையில் உள்ளது.
இரு ஓடைகளும் 2015 ஆண்டின் வெள்ளப்பெருக்கில் சுமார் 3000 கன அடிக்கு மேல் வெள்ள நீர் வடிந்து கழிவெளியினை அடைந்து ஒக்கியம் மடுவு மற்றும் பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காட்டில் கடலில் சென்று கலக்கின்றது. செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளின் மேற்பகுதியில் வண்டலூர் காடுகளிலிருந்து அமைந்துள்ள 35 ஏரிகளின் வெள்ள உபரிநீரானது மதுரப்பாக்கம் ஓடை மற்றும் ஒட்டியம்பாக்கம் ஓடையின் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தெற்குப் பகுதியில் சென்றடையுமாறு இயற்கையாக அமைந்திருந்தது.
நிலவியல் அமைப்பு மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களின்படி இக்கால்வாய்கள் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளின் பட்டா நிலங்கள் மற்றும் அரசு நஞ்சை தரிசு நிலங்களின் வழியாக பரவி ஓடி பள்ளிக்கரணை கழுவெளியில் கலந்து வந்தது. மேற்கண்ட ஓடைகளிலிருந்து டிஎல்எப் குடியிருப்புக்கு வடமேற்கு பகுதிக்கு மேல் கால்வாய் தொடர்ச்சி இல்லாமல் இருப்பதினால், வெள்ள நீர்க் குடியிருப்பு பகுதிகளில் பரவி அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழைக்காலங்களில் சுமார் 3 முதல் 5 அடி அளவில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

நகரமயமாதலால் பட்டா நிலங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதாலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டதாலும், ஒட்டியம்பாக்கம் மற்றும் மதுரப்பாக்கம் ஓடையிலிருந்து வரும் வெள்ள நீர் இயற்கையாக பட்டா மற்றும் தரிசு நிலங்களின் மேல் பரவி ஓடி கழுவெளியில் கலக்க முடியாமல் குடிசைமாற்று குடியிருப்பு மற்றும் டிஎல்எப் மேற்குப் பகுதியில் வெள்ள நீர்த் தேங்கி சாலைகள் வழியாக ஓடி இப்பகுதிகளுக்கு மிகுந்த வெள்ளச் சேதம் ஏற்படுத்துகிறது என்று துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
மிக்ஜாம் புயலால் திங்கட்கிழமையன்று விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்புகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீர் தேசமாக மாறியுள்ள செம்மஞ்சேரியில் இதுவரை எந்த வித உதவியும் கிடைக்கவில்லை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தாக உள்ளது. தங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications