2015 சம்பவம்.. சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயமா? உண்மை இதுதான்! வெதர்மேன் அப்டேட்
சென்னை: மோந்தா புயல் காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளம் போல மீண்டும் சென்னை பாதிக்கப்படும் என்று பேசப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. சென்னைக்கு பெரிய மழை கிடையாது என்று தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் லேசான, மிதமான மற்றும் அவ்வப்போது பெய்யும் தீவிரமான மழை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. இந்த மழை நாளை காலை வரை தொடரும். திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி மற்றும் பழவேற்காடு ஆகிய இடங்களில் மட்டும் 100 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த இடங்களில் கனமழை பெய்யும். கடலுக்கு பக்கத்தில் உள்ள பகுதிகளில கனமழையை எதிர்பார்க்கலாம்.

வடசென்னையில் கனமழை எதிர்பார்க்கப்பட்டாலும், மழையின் அளவு 50-70 மி.மீ என்கிற அளவில்தான் இருக்கும். கடலிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் பகுதிகளில் இந்த அளவுக்கு மழையை எதிர்பார்க்கலாம். தென் சென்னையை பொறுத்தவரை மழையின் தாக்கம் குறைவாகவே இருக்கும். 30-50 மி.மீ வரை மழையை எதிர்பார்க்கலாம். மொத்தமாக சென்னை முழுக்க நாள் முழுவதும் மழையை எதிர்பார்க்கலாம். இந்த மழையால் பாதிப்பு கிடையாது என்பதால் கனமழை அச்சம் வேண்டாம்.
அப்படியே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் கூட, அது வெள்ள பாதிப்பை ஏற்படுத்தாது" என்று கூறி, மழைப்பொழிவின் வகையையும் பட்டியலிட்டிருக்கிறார். அதன்படி
- லேசான மழை - 2.5-7.5 மி.மீ
- மிதமான மழை - 7.6-35.5 மி.மீ
- கனமழை - 64.5-124.4 மி.மீ
- மிக கனமழை - 124.5-244.4 மி.மீ
- அதிகனமழை - 244.5 மி.மீக்கும் அதிகம்
என்று குறிப்பிட்டிருக்கிறார். மொந்தா புயலை பொறுத்தவரை சென்னைக்கு பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் உறுதி செய்திருந்தது. இப்புயல் நாளை இரவு கரையை கடக்கிறது. தற்போதைய நிலவரத்தை பொறுத்த அளவில் வட மாவட்டங்களில் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழையின் தாக்கம் இல்லை.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அப்டேட் கொடுத்திருக்கிறது. அதேபோல காலை 11.30 மணி முதல் வட தமிழகத்தில் மழையின் தாக்கம் கொஞ்சம் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. மழை காரணமாக சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில், பாலவாக்கம் முதல் திருவான்மியூர் வரை 2 கி.மீ.க்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அதேபோல சென்னையின் மற்றொரு நுழைவு பகுதியான மதுரவாயல் முதல் கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 50 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. மற்ற பகுதிகளை பொறுத்தவரை, நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) - 13.0 மி.மீ, நுங்கம்பாக்கம் (சென்னை) - 0.9 மி.மீ, மீனம்பாக்கம் (சென்னை) - 0.8மி.மீ, வேலூர் (வேலூர்) - 0.3மி.மீ, புதுச்சேரி (புதுச்சேரி) - 0.1மி.மீ, சேது பாஸ்கர் விவசாயக் கல்லூரி காரைக்குடி (சிவகங்கை) 16.0மி.மீ, நெய்யூர் (கன்னியாகுமரி) - 15.5மி.மீ, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) - 8.5மி.மீ, ஹிந்துஸ்தான் யுனிவர்ஸ்டி (காஞ்சிபுரம்) 5.5மி.மீ, பூந்தமல்லி (திருவள்ளூர்) - 2.0மி.மீ, என மழை பதிவாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications