சென்னையில் இரவு கொட்டப்போகும் கனமழை! டெல்டா+தென் மாவட்டங்களுக்கும் வார்னிங் கொடுத்த வெதர்மேன்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருந்தது. சென்னையில் மழை இன்று இரவும் நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது குறித்த அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருப்பதாவது, "சென்னையை நோக்கி மழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன. இந்த மேகங்கள் வலுவாக இருப்பதால் இரவு சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. முன்னதாக இன்று மதியம் தொடங்கி இரவு வரை வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதியில் பரவலாக கனமழை பெய்திருந்தது.

தற்போதைய நிலையை பொறுத்தவரை, தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது ராமநாதபுரத்தை தாக்கி வரும் மழை மேகங்கள் அடுத்த கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியை நோக்கி நகரும். மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் இரவு தொடங்கி அதிகாலை வரை மழை பெய்யும்" என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு பருவங்கள் மழைப் பொழிவை கொடுக்கும். ஒன்று தென்மேற்கு பருவமழை, இன்னொன்று வடகிழக்கு பருவமழை. ஜூன் மாதம் பாதியில் தொடங்கி அக்டோபர் மாதம் பாதி வரை நீடிக்கும். இந்த காலத்தில் அரபிக்கடலிருந்து வரும் காற்று, மேற்கு தொடர்ச்சி மலைகள் மேல் வேகமாக மோதி, உயர மேலே எழுந்து மழை மேகமாக மாறுகிறது. அதேபோல வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, வங்கக்கடலிலிருந்து வரும் மழை மேகங்கள் மழைப்பொழிவை கொடுக்கின்றன. வடகிழக்கு பருவமழையின்போது பரவலாக வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் நல்ல மழைப்பொழிவை பெறுகின்றன.
அந்த வகையில் நேற்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகமான மழைப்பொழிவை கொடுக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications