“அசௌகரியம் ஏற்படலாம்”.. அதிகபட்ச வெப்பநிலை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! 3 நாள் லைட்டா மழை இருக்கும்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என்பதால் அசௌகரியம் ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து வெளியான வானிலை அறிவிப்பில், "தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பிப்ரவரி 25 ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

பிப்ரவரி 26 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 27 ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை : பிப்ரவரி 25 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். உள் தமிழகத்தில் அதிக வெப்ப நிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 24 - 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்):
மண்டபம் (ராமநாதபுரம்) 3, மிமிசல் (புதுக்கோட்டை), மாஞ்சோலை (திருநெல்வேலி), நாகுடி (புதுக்கோட்டை), கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 2, நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள்: பிப்ரவரி 26 ஆம் தேதி குமரிக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications