Rain Alert: தமிழகத்தில் பரவலாக பெய்த பலத்த மழை.. இன்று 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது
சென்னை: தமிழகத்தில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் குளுகுளு காலநிலை நிலவியது. இதைத்தொடர்ந்து, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும், சென்னையிலும் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்யக்கூடும் என்று வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் நேற்று பரவலாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலை, மதுரை, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. மழை நீர் வடியாததால் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின. வடிகால்களில் மண்டியுள்ள செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் இன்று பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும், சென்னையிலும் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications