பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கனமழையால் பேருந்து வழித்தடங்கள் மாற்றம்! போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் சில பேருந்துகளின் வழித்தடங்களில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்றும் இன்றும் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. கனமழை காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், சில வழித்தட மாற்றங்களை அறிவித்துள்ளது.
1. ஓ.எம்.ஆர் சாலையில் பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் SRP டூல்ஸ், தரமணி, வேளச்சேரி, காமாட்சி மருத்துவமனை, ரேடியல் சாலை வழியாக சென்று துரைப்பாக்கம் சந்திப்பில் மீண்டும் ஓ.எம்.ஆர் சாலையில் தற்காலிகமாக இயக்கப்படுகிறது.
2. 100அடி சாலையில், MMDA காலனி திரு நகர் அருகில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே கோயம்பேடு பேருந்து நிலையம் வரை இயங்கும் பேருந்துகள் வடபழனி பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
3. ஆவடி, அம்பத்தூரில் இருந்து கிண்டி மார்க்கமாக வரும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படுகிறது.

4. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி செல்லும் பயணிகள் தடம் எண் 104C மற்றும் 104CX ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளவும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், தாழ்தள பேருந்துகளுக்குள் எளிதாக மழைநீர் புகுந்துவிடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications