சென்னையில் கொட்டி தீர்த்த தென்மேற்கு மழை.. இயல்பை விட அதிகம்! இன்னைக்கும் சம்பவம் இருக்கு!
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை இயல்பை விட 39% அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. இன்றும் சென்னை மற்றும் தமிழகத்தின் பரவலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்திற்கு இரண்டு பருவங்கள் மழைப்பொழிவை கொண்டு வரும். ஒன்று தென்மேற்கு பருவமழை. இன்னொன்று வடகிழக்கு பருவமழை. தென்மேற்கு பருவமழையானது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி அக்டோபர் வரை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைப்பொழிவு இந்த காலத்தில் தீவிரமாக இருக்கும். ஆனால் வட மாவட்டங்களில் தற்போது மழை தீவிரமாக பெய்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் ஜூன் 1ம் தேதி தொடங்கி, நேற்று வரை 548.9 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது.

திருவள்ளூர் - 585.8மி.மீ
வேலூர் - 557.9மி.மீ
விழுப்புரம் - 409.5மி.மீ
திருவண்ணாமலை - 434.5மி.மீ
திருப்பத்தூர் - 493.6மி.மீ
ராணிப்பேட்டை - 600.3மி.மீ
செங்கல்பட்டு - 333.9மி.மீ
என மழை பதிவாகியிருக்கிறது. மொத்தமாக இந்த காலத்தில் தமிழகத்தின் சராசரி மழைப்பொழிவு 302.9 மி.மீ ஆகும். இது இயல்பை விட 5% அதிகம். இந்நிலையில் இன்று சென்னை மற்றும் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தொடங்கி செப்.22ம் தேதி வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப். 25 முதல் 27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (22-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications