சென்னையில் இனி டமால் டுமீல் தான்..இந்த மாதம் முழுவதும் சம்பவம் செய்யப் போகுது மழை! வெதர்மேன் கணிப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாப்பூரில் மட்டும் அதிகாலையில் 80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் வட தமிழகம் முழுவதும் மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னை உட்பட வடதமிழகத்தில் பகலில் கடுமையான வெயிலும், இரவில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. எவ்வளவு மழை பெய்தாலும் வானிலை குளிர்ச்சியடையாமல், வெயிலும் மழையும் கலந்த காலநிலையே நிலவுகிறது.
இந்நிலையில், தென்னிந்தியாவை சூழ்ந்து மேலடுக்கு வளிமண்டல சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, வடதமிழகம், சென்னையில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

சென்னை மழை
இந்நிலையில், தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை விடிய, விடிய பெய்த கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. மயிலாப்பூரில் மட்டும் அதிகாலை 80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல அயனாவரம் 70 மிமீ, மேற்கு மாம்பலம், பெரம்பூர், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் தலா 60 மிமீ மழையும், கோடம்பாக்கம், கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
சென்னை வானிலை
காலை 2 மணி முதல் 5 மணி வரை தொடர்ந்து பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி, வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்தனர். மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட இருந்த பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
தமிழ்நாடு வெதர்மேன்
தோகாவிலிருந்து சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதோடு துபாய், லண்டன் சார்ஜா, விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த பிறகு தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மற்றும் வட தமிழகம் முழுவதும் மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வடதமிழகம் கனமழை
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில்," வேலூரிலிருந்து உருவாகிய புயல்கள் மெதுவாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களை நோக்கி நகர்கின்றன. அடுத்த 2 மணி நேரத்தில் நகரின் மேற்கு எல்லையை அடையும். இன்று சென்னையில் மேகமூட்டத்துடன் கூடிய அற்புதமான வானிலை இருக்கும். அடுத்த மூன்று நாட்கள் முழுவதும் "டமால் டுமீல்" மழை பெய்யும், சென்னையில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம். செப்டம்பர் இரண்டாம் பாதி முழுவதும் வடதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை அதிகரிக்கும்." என கூறியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை மற்றும் வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி-மின்னலுடன் கூடிய கனமழை தவிர்க்க முடியாத ஒன்று போல தெரிகிறது. பொதுமக்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து, மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தண்ணீர் தேங்கிய சாலைகளில் பயணிக்கும் போது கவனமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications