மேட்டர் சீரியஸ்.. ஹெலிகாப்டர்களை அனுப்புங்க.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கோரிக்கை!
சென்னை: கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக் கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுவதுமாக மழைநீரால் அடித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது. இதனால், டிசம்பர் 17ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.
ரயில் நிலையத்தை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இந்த ரயிலில் இருந்த பயணிகள் சுமார் 300 பேர் மீட்கப்பட்டு அருகே உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரயிலில் இருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்ததால் 200க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்க முடியவில்லை. ரயில் நிலையத்தில் சிக்கி உள்ள பயணிகளுக்கு சாலை மார்க்கமாக உணவு வழங்க முடியாத நிலையில், இன்று காலை முதல் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் மீட்பு குழு உணவு பொருட்கள் வழங்கியும், மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டும் வருகிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில், படகுகள் மூலம் மக்களை மீட்பது மிகுந்த கால தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. விரைந்து பொதுமக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் கூடுதலாக தேவை என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக ஹெலிகாப்டர்களை வழங்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்க்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில், "தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சில இடங்களில் 1871ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரங்களில், தாமிரபரணி ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள எங்கள் அதிகாரிகள், SDRF மற்றும் NDRF குழுக்களை நாங்கள் திரட்டியுள்ளோம். தமிழகம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், இப்பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. ஹெலிகாப்டர்கள் மூலம்தான் அவர்களை அடைய முடியும். தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்களும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காகவும், மாயமானவர்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுப்பப்படுகின்றன.
பேரழிவின் கொடூரத்தால் அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள் பாதுகாக்கப்படுவதால், மீட்பு மற்றும் நிவாரண விநியோகத்திற்காக எங்களுக்கு அதிக அளவில் ஹெலிகாப்டர்கள் தேவை. எனவே, அதிகபட்ச ஹெலிகாப்டர்களை உடனடியாக அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications