ஏதாவது செய்யனும்னு நெனைச்சா.. இதை செய்யுங்க! அதை விட்டுட்டு.. ஆளுநருக்கு ஜோதிமணி எம்பி சுளீர்
சென்னை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் திடீரென பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு, அது குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்திருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் இப்படி ஒரு மழையை நாங்கள் பார்த்ததில்லை என இம்மாவட்ட மக்கள் கூறுகின்றனர். பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உயிர் பயத்தில் மக்கள் வீடுகளின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு உணவு கொண்டு சேர்க்க முடியாமல் மீட்பு படையினர் திணறி வருகின்றனர். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து தென் மாவட்டங்களின் சில பகுதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையிலிருந்து இந்த 4 மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் மதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான மக்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
அதாவது, வெள்ள மீட்பு குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல் படை, ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் நாளை ஆளுநர் ஆலோசனை மேற்கொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"தமிழக ஆளுநர் ரவி இந்த நெருக்கடியான பேரிடர் காலத்தில் தமிழகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒன்றிய அரசிடமிருந்து பத்தாயிரம் கோடி ரூபாய் நிதியை கேட்டுப் பெற்றுவரலாம். வரவேற்போம். அதைவிட்டு விட்டு அதிகாரிகள், அமைப்புகளின் ஆய்வுக்கூட்டத்தை நடத்துவது அவசியமற்றது.அதை செய்வதற்கு சிறப்பாகச் செயல்படும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு இருக்கிறது. இந்த நெருக்கடியான பேரிடர் நேரத்தில் அரசியல் செய்வது ஆளுநருக்கு அழகல்ல" என்று கூறியுள்ளார்.
முன்னதாக 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைசம்சர் மு.க.ஸ்டாலின், "மக்களை உடனடியாக மீட்டெடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டியது தான் நம் தற்போது இருக்கக்கூடிய தலையாய கடமை. இந்தப் மீட்புப்பணிகளில் ராணுவம், NDRF. SDRF ஆகியவற்றோடு இணைந்து, காவல்துறையும், தீயணைப்பு துறையும், வருவாய்த்துறையும் தொடர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை உடனடியாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
இதற்கு தேவைப்படும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக புதிய முகாம்களை அமைத்திட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயலாற்றி மக்களின் உயிர்களை காப்பாற்றி, அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டிட வேண்டிய சவாலான நேரமாக இது அமைந்திருக்கிறது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications