டெல்டா & தென் தமிழகத்தில் சம்பவம் வெயிட்டிங்.. மாலைக்கு பின் கொட்ட போகுது மழை.. அப்போ சென்னை?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே நல்ல மழை பெய்து வரும் நிலையில், இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை ரெயின்ஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
நாட்டின் வட மாநிலங்களில் பருவமழை ஆரம்பித்தது முதலே கனமழை கொட்டி வருகிறது. பல வட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. அதிலும் ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மண் சரிவு கூட ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

இருப்பினும், தென்மாநிலங்களில் பெரியளவில் மழை இல்லாமலேயே இருந்தது. நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் கூட பருவமழை வழக்கத்தைக் காட்டிலும் சுமார் 50% குறைவாகவே பெய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வானிலை: தமிழ்நாட்டிலும் கிட்டதட்ட அதே நிலை தான். ஜூன் மாதம் முதல் 15 நாட்கள் மே மாத்திற்கு இணையாக வெப்பம் இருந்தது. அதன் பின்னரே டக்கென கிளைமேட் மாறிய நிலையில், மழை கொட்டி தீர்த்தது. இருப்பினும், அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரியளவில் மழை இல்லாமலேயே இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக மட்டும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. இருப்பினும், மாநிலம் கொட்டி தீர்க்கும் அளவுக்கு பெரியதாக எங்கும் மழை இல்லை. இதற்கிடையே வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை ரயின்ஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை ரயின்ஸ் தெரிவித்துள்ளது.
எங்கே மழை: இது தொடர்பாகச் சென்னை ரயின்ஸ் தனது ட்விட்டரில், "மண்டலம் தெற்கு நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளும் தென் தமிழகப் பகுதிகளிலும் இன்று மாலை / இரவில் இடியுடன் கூடிய மிதமான மழை இருக்கும்.. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் ஓரிரு இடங்களில் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வானிலை ஆய்வு மையமும் எங்கெல்லாம் மழை இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தது. அதில் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வானிலை மையம்: நாளைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications