டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல இன்று தொடங்கி ஜூன் 15 வரை டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படாததால், இந்த மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் தற்போது பெய்திருக்கும் மழை ஓரளவு மக்களை நிம்மதியடைய செய்திருக்கிறது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, லெட்சுமாங்குடி, வடபாதிமங்கலம் என்று பரவலாக நேற்றிரவு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்திருக்கிறது.
மழை குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "13-06-2026 மற்றும் 14-06-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-06-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-06-2026 முதல் 18-06-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
இன்று (12-06-2026) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (13-06-2026) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications