ஓய்வின்றி ஆய்வு.. சுற்றிச் சுழன்ற உதயநிதி ஸ்டாலின்.. வாஞ்சையாக கன்னத்தை கிள்ளி முத்தமிட்ட பெண்மணி!
சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் நள்ளிரவு முதலே அதிரடி ஆய்வில் இறங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மீண்டும் இன்று காலை முதல் தற்போது வரை இடைவிடாமல் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
இன்று காலை முதலே, அடுத்தடுத்து ஆய்வு, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிடுவது என கொட்டும் மழைக்கு மத்தியில் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகிறார் துணை முதல்வர் உதயநிதி. அப்போது, பணியாளர்களுக்கு சிற்றுண்டிகளையும் வழங்கி வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டபோது, பெண்மணி ஒருவர், வாஞ்சையாக உதயநிதியின் கன்னத்தில் கிள்ளி அன்போடு முத்தமிட்டார்.

நள்ளிரவே ஆய்வை தொடங்கிய உதயநிதி: நேற்று இரவு சென்னையில் கனமழை பெய்யத் தொடங்கிய நிலையில் உடனடியாக களத்தில் இறங்கி, மழைநீர் எங்கும் தேங்குகிறதா என ஆய்வில் இறங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியின் கரையோரத்தில் ஆய்வு மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.
நாராயணபுரம் ஏரியின் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து, மழை நீர் ஏரிக்கு வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம், கரைகளின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகள், அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
நாராயணபுரம் ஏரிக்கு, கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து உபரிநீர் வரும் கால்வாயை அம்பேத்கர் சாலையில் இருந்து ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகள், கருத்துக்களைப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

சொந்த தொகுதியில் அதிரடி ஆய்வு: அதைத்தொடர்ந்து, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி இராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை நேரில் ஆய்வு செய்தார். மழைப்பொழிவை முறையாக கண்காணித்து மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், மயிலாப்பூர் முசிறி சுப்பிரமணியம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிற பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும், கனமழை முன்னெச்சரிக்கைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
முகத்துவார பகுதியில் ஆய்வு: இன்று காலையில் சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆறு கடலில் கலக்கின்ற முகத்துவார பகுதியில் ஆய்வு செய்தார். கூவம் ஆற்றின் முகத்துவாரம் தூர்வாரப்பட்டுள்ள நிலையில், மழைநீர் வடிகின்ற விதம் உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகள் - அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார் துணை முதல்வர் உதயநிதி. கட்டுப்பாட்டு அறைக்கு வரக்கூடிய அழைப்புகள், மழை பெய்து வருவது தொடர்பான பதிவுகள் - நீர்நிலைகளின் தற்போதைய நிலை - பொதுமக்களின் கோரிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
கண்ட்ரோல் ரூமுக்கு போன உதயநிதி: மேலும், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை எழிலகத்தில் இயங்கும் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு நடத்தினார். தமிழ்நாடெங்கும் பரவலாக பெய்து வரும் மழை நிலவரம், நிவாரணப் பணிகளுக்கு தயார் நிலையில் களத்தில் உள்ள பேரிடர் மீட்புக் குழுக்களின் விவரம், மழைக்கால மருத்துவ முகாம்கள், மழைநீர் தேங்கினால் அதனை அகற்றும் பணிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், கொட்டும் மழையில் ஜெர்கின் அணிந்தபடி சென்று, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட வி.பி.இராமன் சாலை மற்றும் அதையொட்டிய தெருக்களில் மழை நீரை அகற்றுகின்ற பணிகளை இன்று ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
கொட்டும் மழையில் ஆய்வு: கன மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை துரிதப்படுத்திட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை கேட்டுக் கொண்டார். வடகிழக்கு பருவமழை காலத்தில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் ஓரணியில் நின்று மக்களை காப்போம் என்று ஆலோசனைகளை வழங்கினார்.
இராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் அருகே மழை நீர் வடிகால் வழியாகவும், எந்திரங்கள் மூலமாகவும் மழைநீர் வெளியேற்றம் ஆவதை ஆய்வு செய்தார். மழைநீர் வெளியேற்றம் மட்டுமன்றி, மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய அதிகாரிகள் - அலுவலர்களை அறிவுறுத்தினார் துணை முதல்வர் உதயநிதி.
அதைத்தொடர்ந்து, பெசன்ட் சாலை அருகே பக்கிங்காம் கால்வாயில் மழை நீர் வடிந்து கடலுக்குச் செல்வதை இன்று பார்வையிட்டு, அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கினார். அண்ணா சாலை & ஜி.பி.சாலையில் நீர் வெளியேற்றும் பணிகளை இன்று பகலும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அதிகாரிகளுக்கு ஆலோசனை: தொடர் கனமழைக்கு மத்தியில் சென்னை தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி கோடம்பாக்கம் அஜீஸ் நகர் பகுதியில் மழை நீர் வெளியற்றப்படும் இடங்களில் ஆய்வு செய்தார். மேலும், அங்கு அமைந்துள்ள பம்பிங் ஸ்டேஷனுக்கு சென்று இன்று அதன் செயல்பாட்டினைப் பார்வையிட்டார். அங்கு மழை நீரை வெளியேற்றுவதற்காக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள், பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், அரும்பாக்கம் - விருகம்பாக்கம் கால்வாய் பகுதியில் இன்று மதியம் ஆய்வு செய்து, அந்த கால்வாயின் வழியாக மழைநீர் வெளியேறும் விதம் குறித்து அதிகாரிகள் - பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களுக்குச் சென்று உடனடியாக நீரை வெளியேற்ற அறிவுரைகளை வழங்கினார்.
சென்னை வேளச்சேரி பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள சூழலை இன்று ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின், வேளச்சேரியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வீராங்கல் கால்வாயில் மழைநீரை வெளியேற்றுகிற பம்பிங் நிலையம் வேளச்சேரி - புழுதிவாக்கம் இடையிலான சாலையில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் ஆய்வு செய்து, மழை நீரை விரைவாக வெளியேற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
கன்னத்தை கிள்ளி முத்தமிட்ட பெண்மணி: சென்னை வேளச்சேரி பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீரானது, வேளச்சேரி - பெருங்குடி சாலையின் குறுக்கே செல்லும் கால்வாயின் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி நோக்கிச் செல்வதை நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது, அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை வேளச்சேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, பெண்மணி ஒருவர், வாஞ்சையாக உதயநிதியின் கன்னத்தில் கிள்ளி அன்போடு முத்தமிட்டார்.
பின்னர், நேற்று மழை தொடங்கிய போது, பள்ளிக்கரணை - கோவிலம்பாக்கம் இடையிலுள்ள நாராயணபுரம் ஏரியிலிருந்து மழைநீர் வெளியேறுவதை ஆய்வு செய்த நிலையில், இன்றைய தினமும் அங்கு சென்று அப்பகுதியில் உள்ள சூழலை அதிகாரிகள் - அலுவலர்களிடம் நேரில் கேட்டறிந்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications