அமைச்சர் உதயநிதியுடன் இயக்குநர் மாரி செல்வராஜ்.. சர்ச்சையான புகைப்படம்.. திமுகவினர் விளக்கம்
சென்னை: நெல்லையில் வெள்ள நிவாரண பணிகளில் அமைச்சர் உதயநிதியுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் இருந்த புகைப்படம் சர்ச்சையாகி உள்ளது. அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய இவர் யார் என்று கேள்விகளை எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக திமுக நிர்வாகி எஸ்கேபி கருணா விளக்கம் அளித்துள்ளார்.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான கன அடிநீர் பாய்ந்தோடியதால் . திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்து தனித்தனி தீவுகளாகி உள்ளன. இம்மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் இணைந்து மீட்பு பணிகளிலும் மாரிசெல்வராஜ் ஈடுபட்டார். இது தொடர்பாக மாரி செல்வராஜ் வெளியிட்டிருந்த பதிவில், "கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர் .வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது... நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்... மீள்வோம்" என்று கூறியிருந்தார்.
நெல்லையில் வெள்ள நிவாரண பணிகளில் அமைச்சர் உதயநிதியுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் இருந்த புகைப்படத்தை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய இவர் யார் என்று கேள்விகளை எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக திமுக நிர்வாகி எஸ்கேபி கருணா விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "இயக்குநர் மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவரது தந்தை வேறொரு ஊரில் சிக்கியுள்ளார். திருநெல்வேலியில் இருந்த மாரி செல்வராஜ் அவரது சொந்த ஊர் மக்களை மீட்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உதவியைக் கோருகிறார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவரது தந்தை வேறொரு ஊரில் சிக்கியுள்ளார். திருநெல்வேலியில் இருந்த மாரி செல்வராஜ் அவரது சொந்த ஊர் மக்களை மீட்க அமைச்சர் @Udhaystalin உதவியைக் கோருகிறார்.
— SKP KARUNA (@skpkaruna) December 19, 2023
அப்போது நெல்லையை நெருங்கிக் கொண்டிருந்த…
அப்போது நெல்லையை நெருங்கிக் கொண்டிருந்த அமைச்சர், நீங்க அங்கேயே இருங்க. கலெக்டரை சந்தித்து விட்டு நாங்கள் அங்கே வருகிறோம் என சொல்லி விட்டு இரவில் அந்த இடத்துக்குச் சென்றுள்ளார். ஆற்றில் நீரோட்டம் மிக அதிகமாக இருப்பதாலும், அன்று இரவும் கனமழை வரும் என்பதாலும் மீட்புப்பணி இப்போது சாத்தியமில்லை என்பதை அறிந்து கொள்கின்றனர்.
நாளை காலையில் நிலைமையைப் பார்த்து விட்டு பிறகு முடிவு செய்யலாம் என மாரியிடம் சொல்லி விட்டு அமைச்சர் அடுத்த இடத்துக்கு புறப்படுகிறார். ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு என்னென்ன கதைகளைக் கட்டினாலும் இதுதான் உண்மை என்பதை அங்கிருந்த ஓராயிரம் பேர்கள் அறிவார்கள்.
சரி! அதெல்லாம் இருக்கட்டும். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் இதை எப்படி உணர்வார்கள்? பெரிய சினிமா டைரக்டரா இருந்தாலும் நம்மூர் பையன் நமக்கு கஷ்டம் வரும்போது ஓடி வந்து நிற்கிறான் என்பார்கள். அமைச்சராகவே இருந்தாலும் நமக்கு ஓர் ஆபத்து என்றால், நம்ம ஊர் பையன் அழைத்தவுடன் நேரில் வந்து நின்றார் என நினைப்பார்கள். அமைச்சருக்கு நண்பர் என்றாலும் அரசு நிர்வாகம் முன்னுரிமை, சூழ்நிலை அடிப்படையில்தான் செயல்படுகிறது என்பதை மீட்புக்குழுவினர் புரிந்து கொள்வார்கள்.
இத்தகைய நம்பிக்கையும், புரிதலும்தான் பேரிடர் நேரத்தில் முக்கியமே தவிர, தொலைவில் நின்று வேடிக்கைப் பார்க்கும், எல்லாவற்றிலும் அரசியல் லாபம் தேடும் சல்லித்தனமான இழிபிறவிகளின் அவதூறுகள் எதுவுமே பொருட்படுத்தத்தக்கவை அல்ல. இந்த பொருநை வெள்ளம் வடியும் முன்னரே இவர்களின் இருப்பும் காலத்தால் மறக்கப்பட்டு விடும்" இவ்வாறு எஸ்கேபி கருணா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications