குட்டீஸ்களுக்கு குட்நியூஸ்..இந்த மாவட்டத்தில் விடுமுறை! 10 மணி வரை 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் அருணா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. எனவே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது.
இதேபோல தேனி, மதுரை, நெல்லை, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், 28 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக இன்று( 17.06.2024) ஒரு நாள் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். நேற்று வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மீறி வகுப்புகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை, உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 10 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 12 செ,மீ, மேல்பவானியில் 10.8 செ.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications