வேதனை! அவசர உதவி எண்களும் ஸ்விட்ச் ஆஃப்.. சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்த மருத்துவர் குமுறல்!
சென்னை: சென்னையில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி வரும் நிலையில், சென்னையே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில், இன்று காலை பணிக்குக் கிளம்பிய மருத்துவர், சாலை முழுக்க மழைநீர் தேங்கி இருந்ததால் பட்ட கஷ்டங்களை விவரித்துள்ளார்.
சென்னையில் விடிய விடிய பெய்த அதி கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் ஏரிகள் நிரம்பியுள்ளதால், சென்னை நகர் முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை விடாத சூழலில், மேலும் மேலும் தண்ணீரின் மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை மக்கள் அச்சமடைந்துள்லனர். இதற்கிடையே, அவசர உதவிக்காக பல்வேறு எண்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடுமையான புயல் மழை காரணமாக, பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடை பட்டுள்ளதால், செல்போன்கள் ஸ்ட்விச் ஆஃப் ஆகியுள்ளன. அவசர உதவிகளுக்காக கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாமலும், மழைநீர் சூழ்ந்துள்ளதால் வெளியே வர முடியாமலும் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அவசர உதவி எண்களும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் வீ.புகழேந்தி, அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வருகிறார். சென்னையில் வசித்து வரும் அவர், இன்று காலையில், தனது க்ளினிக்கிற்கு செல்ல முயன்றபோது, சென்னை வெள்ளத்தால் பட்ட கஷ்டங்களை தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழை என்றாலும், கல்பாக்கத்தில் மருத்துவராக பணிபுரியும் நான் இன்று சென்னையில் இருந்து கட்டாயம் அங்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏனெனில், அங்கு நோயாளிகள் எனக்காக காத்திருப்பார்கள். எனவே தனியார் வாடகை காரில் சென்று கொண்டிருந்தேன். அதிகாலையில் புறப்பட்டபோது சாலைகளில் மழை நீர் தேங்கியதால், வண்டியை சிரமத்துடன் ஓட்டுனர் ஓட்டி வந்தார். ரங்கராஜபுரம் பிரதான சாலையில் கார் சென்றபோது அங்கு மழைநீர் சற்று அதிகம் தேங்கியிருந்ததால் ஓட்டுநர் அச்சத்துடன் பின்வாங்கிவிட்டார்.
வேறு வழியை முயற்சித்தபோது, அங்கு மரம் முறிந்து விழுந்து கிடந்ததால் செல்ல முடியவில்லை. நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்துவிட்டு, விடிந்ததும் பேருந்துகள் இயங்க துவங்கியவுடன் புறப்பட்டபோது, காரின் உள்ளே நீர் வர ஆரம்பித்துவிட்டது. பதட்டத்தின் உச்ச கட்டத்திற்கு சென்ற ஓட்டுநர் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினார். உடனடியாக உதவி எண்களுக்கு அழைத்தால், அசோக்நகர் தீயணைப்பு எண் - 9445086046, தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. நான் அந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை.
தீயணைப்பு அவசர எண் 101க்கு ஓட்டுநர் பலமுறை உதவி கேட்டு போன் செய்தார். எந்த பதிலும் இல்லை. 1077 அவசர எண்ணுக்கு போன் செய்தார். எந்த பதிலும் இல்லை. சைதாப்பேட்டை தீயணைப்புத்துறை வாட்ஸ் அப் எண்ணை தொடர்புகொண்டால், அவர்கள் அசோக்நகர் எண்ணுக்கோ அல்லது 101 எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மட்டுமே தகவல் கிடைத்தது.
எனவே, அரசு தரப்பில் எந்த ஒரு சிறு உதவியும் கிடைக்கவில்லை. 1/2 கி.மீ முன்னே ஆர்யகவுடா சாலை (மேற்கு மாம்பலம்) வழிப்போக்கர்கள் உதவியுடன், ஆர்யகவுடா சாலையை அடைந்த போது அங்கு சாலையில் 2.5 செ.மீ. நீர் மட்டுமே இருந்தது. பின்னர் பயணிக்கும்போது போஸ்டல் காலனி திருப்பத்தில் உள்ள முக்கிய சாலையில், நீர் சற்று அதிகம் இருந்ததால் ஓட்டுநருக்கு முன்னேறிச் செல்ல மீண்டும் தயக்கம்.
வேறு வழியின்றி என்னை கீழே இறங்கி இறக்கிவிட்டார் ஓட்டுநர். கடும் மழையிலும், முழங்கால் அளவு தண்ணீரிலும் 2 கி.மீ நடந்தே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில சாலைகளில் நீர் குறைவாகவும், சில இடங்களில் நீர் அதிகமாகவும், ஒரே சாலையில் சில பகுதியில் நீர் அதிகமாகவும், சில பகுதிகளில் குறைவாகும் இருக்கும் சூழல்.
அசோக் பில்லர் நிறுத்தத்தில் பேருந்து கிடைத்தவுடன், பேருந்தில் செல்வது சற்று சிரமம் எனினும் உயரமாக இருப்பதால் சாலைகளில் பயணிக்க ஓரளவு முடிகிறது. உயரம் குறைந்த கார்களில் நீர் புகுந்துவிடும் என்பதால் கார் பயணம் மழைப் பொழிவு அதிகம் இருந்தால் ஆபத்தானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வழியாக கல்பாக்கத்தில் நான் இறங்கிக் கொண்டேன்.
முன்னரெல்லாம் மழை கொட்டிக்கொண்டிருக்கும் வேளையில் இவ்வளவு நோயாளிகள் வரமாட்டார்கள். மழை விட்டவுடன்தான் வருவார்கள். ஆனால் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காய்ச்சல் மற்றும் ஃப்ளு, நிமோனியா போன்றவற்றின் காரணமாக, மக்கள் கொட்டும் மழையிலும் மருத்துவமனைக்கு படையெடுக்கிறார்கள்.
எனவே அரசு மழைக்காலங்களில் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக சாலைகளில் உள்ள மேடு பள்ளங்கள் குறித்த அறிவிப்பு பலகைகளை அரசு ஆங்காங்கே வைத்தால் நல்லது. மழைக்காலங்களில் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications