120 கிமீ வேகத்தில் பேய்க்காற்று.. கரையை கடக்கும் ‛டானா’ புயலால் ஒடிசாவில் கனமழை! உஷாரான மே.வங்கம்
புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான டானா புயல் நள்ளிரவு 12.20 மணிக்கு பிறகு கரையை கடக்க தொடங்கியது. தற்போது வரை புயல் ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு இடையே மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக ஒடிசாவில் பேய்க்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
வங்கக்கடலில் அவ்வப்போது புயல்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த 21ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது. 'டானா' என பெயரிடப்பட்ட இந்த புயல் என்பது நேற்று தீவிர புயலாக மாறியது.

இந்த புயல் என்பது ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே இன்று அதிகாலை கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதோடு புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை காற்று வீசும் என்றும் எச்சரிக்கை செய்தது.
அதன்படி நள்ளிரவு 12.20 மணிக்கு டானா புயல் கரையை கடக்க தொடங்கியது. மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் புயல் கரையை கடந்து வருகிறது. இந்த புயல் காரணமாக ஒடிசாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஒடிசாவின் ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பால்சோட் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக பத்ரக் மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
அதேபோல் கடலில் 1 மீட்டர் முதல் அதிகபட்சமாக 2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் வீசுகின்றன. புயல் முழுவதுமாக கரையை கடக்க இன்னும் 1 முதல் 2 மணிநேரம் ஆகும் என்று இன்று அதிகாலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று காலையில் மணிக்கு 110 கிலோமீட்டர் முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் தீவிர புயலாக கரையை கடந்தது. இந்த புயல் ஒடிசாவின் பிதர்கனிகா - தாம்ரா இடையே கரையை கடந்தது.
இருப்பினும் தற்போது வரை ஒடிசாவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. புயல் காரணமாக முன்னெச்சரிக்கை பணிகள் ஒடிசாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஸ், ரயில், விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.
அதேபோல் மேற்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்பார்த்ததை விட தற்போது வரை அங்கு புயலில் தாக்கத்தால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றே முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புயல் காரணமாக ஒடிசாவில் 4 லட்சம் பேரும், மேற்கு வங்காளத்தில் 2.82 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 7,200 புயல் நிவாரண முகாம்களை ஒடிசா அரசு ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 22 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications