வடிந்த வெள்ளம்.. தூத்துக்குடியில் மெல்ல திரும்பும் இயல்பு நிலை! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் லீவு
தூத்துக்குடி: கனமழையால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படுமா? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வட கிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 18, 19ம் தேதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்த காரணத்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின.

அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்தது. குளங்கள் உடைந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.
நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் படகுகள் மூலமாக கூட மக்களை மீட்க முடியாத சூழல் இருந்தது. எனவே கடற்படையின் ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் பேர் இந்த மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்தது. மழை நின்று 5 நாட்கள் ஆன நிலையில் ஏறத்தாழ அனைத்து இடங்களிலும் வெள்ளம் வடிந்துவிட்டது. இருப்பினும், வெள்ளத்தின் போது ஏற்பட்ட சேதாரங்கள் இன்னும் சீர் செய்யப்படவில்லை.
மழை வெள்ளத்தில் உடைமைகள் அடித்துச்செல்லப்பட்டன. சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இணைப்பு சாலைகள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன, மின் கம்பங்கள் சாய்ந்திருக்கின்றன. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனவே மழை வெள்ளம் பாதிப்புகள் காரணமாக இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்த அளவில், ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக ஜன.2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருக்கிறார். மேலும், மழைவெள்ளம் காரணமாக விடுபட்ட அரைாயண்டு தேர்வுகள் ஜன.2ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications