இருளில் சென்னை! மின்வினியோகம் தொடக்கம்.. ஒவ்வொரு பகுதிக்கா வந்துகொண்டிருக்கிறது.. மின்சார வாரியம்
சென்னை: மிக்ஜாம் புயலல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி பெரும்பாலான இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் மழை குறைந்த இடங்களில் மின்வினியோகம் வழங்கப்பட்டு வருவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை குறைவு தான் என்று பேசப்பட்ட நிலையில், கடந்த மாதம் இறுதியில் பருவமழை சூடுபிடித்தது. அதுவரை வழக்கத்திற்கு குறைவான சதவீத மழையே தமிழகத்தில் பெய்து இருந்தது. ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்து படிப்படியாக மழை அதிகரித்தது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் மழையின் சராசரி சதவீதம் அதிகரிக்க தொடங்கியது.

தொடந்து வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் இன்று சென்னையே மழை வேண்டாம்.. வேண்டாம்.. என்று சொல்கிற அளவுக்கு வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தற்போது வரைக்கும் பெய்து வருகிறது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மக்கள் எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சாப்பாடு வாங்குவதற்கோ, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கை அடியோடு முடங்கியது என்றே சொல்லலாம். இதற்கிடயே தமிழக அரசும் பல்வேறு முன்னேற்பாடுகளையும், நிவாரண பணிகளையும் செய்து வருகிறது.
இதேபோல் பலத்த காற்றும் வீசியதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்திருந்தன. பல இடங்களில் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தது. இதனால் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. சென்னையில் இன்டர்நெட் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. துணை மின் நிலையங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்துவிட்டன. துணை மின் நிலையங்களில் நீரை அகற்றம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மின்வினியோகம் துண்டிக்கப்பட்டதால் சென்னை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
மின்வினியோகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் தற்போது ஒருசில இடங்களில் மின் வினியோகம் கொடுக்கப்படுள்ளது. குறிப்பாக சென்னையில் மழை குறைந்த இடங்களில் மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மின்கம்பங்கள் சீராக உள்ள இடங்களில் மின் வினியோகம் வழங்கப்படு வருவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications