போக்கு காட்டிய பெங்கல் புயல்.. வானிலை மையத்தின் கணிப்பு தவறியது எப்படி? பாலச்சந்திரன் தந்த விளக்கம்
சென்னை : ஃபெங்கால் புயல் என்பது வானிலை மையத்துக்கு தொடர்ந்து போக்கு காட்டி வந்தது. இறுதியாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பையும் மீறி இன்று மதியம் ஃபெங்கால் புயல் உருவாகி உள்ளது. இதற்கிடையே தான் வானிலை ஆய்வு மையத்தை இந்த புயல் குழப்பியது எப்படி? என்பது பற்றி தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கி உள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக உருவாகி உள்ளது. இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் தற்போது புதுச்சேரிக்கு தென்கிழக்கே 270 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 10 கிலோமீட்டர் வேகத்தில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க இந்த புயல் என்பது வானிலை மையத்தையே குழப்பி விட்டது. கடந்த 26ம் தேதியே புயல் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து அது தாமதமானது. அதுமட்டுமின்றி இந்த புயல் தற்காலிக புயலாக உருவாகி வலுவிழந்து கரையை கடக்கும் என்று இன்று கணிக்கப்பட்டது. அதுவும் பொய்யானது.
இறுதியாக இன்று மதியம் தென்மேற்கு வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகி நாளை புயலாகவே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஃபெங்கல் புயலை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பை தாண்டி போக்கு காட்டி விட்டது. இது தற்போது விவாதமாகி உள்ளது.
இந்நிலையில் தான் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு எப்படி மிஸ்ஸானது என்பது பற்றி தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஃபெங்கல் புயல் குறித்த அறிவிப்பில் மாற்றம் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி நான் விளக்கம் அளிக்கிறேன்.
எந்தவொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அல்லது தாழ்வு மண்டலம் வலுபெறக்கூடும் வேண்டுமெனில், வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் காற்று குவிதல், மேற்பகுதியில் விரிவடைதல், நடுப்பகுதியில் செல்லக்கூடிய காற்றின் ஈரப்பதம் என பல்வேறு காரணிகளைக் கொண்டிருக்க வேண்டும். கடந்த நவம்பரம் 26 முதல் நவ.27-ம் தேதி வரை இவையெல்லாம் அதிகரித்திருந்தது.
அதன்பிறகு நவம்பர் 28-ம் தேதி குறைந்தது. அதன்பிறகு, கீழ்ப்பகுதியில் காற்று குவிதல் அதிகரித்துள்ளது. அதேபோல், வளிமண்டலத்தின் மேல்பகுதியில் காற்று விரிவடைதலும் தொடர்ந்து நிலைப்பெற்றிருந்தது. அதேபோல் காற்று முறிவு இந்தப் பகுதியில் நேற்று முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் குறைய தொடங்கியுள்ளது.
இந்த ஃபெங்கல் புயல் இலங்கையை நோக்கிச் சென்றபோது, அதன் வேகம் குறைந்து இலங்கை அருகில் பெருமளவு நிலை கொண்டிருந்தபோது, பெருமளவு மழை பெய்தது. இதனால் அதன் சக்தி குறைந்திருந்தது. ஈரப்பதமும் குறைந்திருந்தது.
பிறகு அதன் வேகம் படிப்படியாக அதிகரிக்கத் துவங்கியது. தற்போது அது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தைவிட்டு நகர்ந்து செல்ல தொடங்கியபோது, அதனுள் காற்று குவிதலும், ஈரப்பதம், விரிவடைதலும் அதிகமானது. இதனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது புயலாக வலுப்பெற்றுள்ளது.
கடலோர மாவட்டங்களில் காற்றின் தாக்கமும் இருக்கும். மழையின் தாக்கமும் இருக்கும். சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளில், இதன் வலுவைப் பொறுத்தவரையில் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்தது. தொடர்ச்சியான மாற்றங்கள் இருந்தது. அதைத் தொடர்ந்து கண்காணித்து புயல் அறிவிப்பு கூறப்பட்டுள்ளது
இதனால் இன்று புயல் உருவாகி உள்ளது. தற்போது புயல் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications