இது ஒரு ஆரம்பம் தான்.. திருச்சிக்கு வந்த முதல் மழை.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன சூப்பர் விஷயம்
திருச்சி: ஏப்ரல் மற்றும் மே முதல் வாரத்தில் கடுமையான வெப்பமான நாட்களுக்குப் பிறகு திருச்சி நகரில் முதல் மழை பெய்திருக்கிறது. அவர்களுக்கு இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.. இன்னும் 7 முதல் 10 நாட்களில் நல்ல மழை வரவிருக்கிறது என்று கூறினார்.
திருச்சியில் வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு வெயில் சுட்டெரித்தது. கடந்த மாதம் முழுவதும் வெயில் மிக கடுமையாக இருந்தது. மே முதல் வாரத்திலும் வெயில் கடுமையாக இருந்து. திருச்சியில் 109 டிகிரி வரை வெயில் சுட்டெரித்த காரணத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். வெப்ப அலையுடன் அனல்காற்றும் இருந்த காரணத்தால் அவதிப்பட்ட திருச்சி மக்கள், வருண பகவான் எப்போது வருவார் என்று ஏங்கி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 6-ந் தேதியில் இருந்து தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. வரும் 15-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று திருச்சி நகரில் பகலில் வெப்பம் அதிகமாக இருந்தது. ஆனால் மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. மாலை 6 மணியளவில் திருச்சி மாநகரில் தில்லை நகர், உறையூர், கருமண்டபம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.
இதேபோல் உப்பிலியபுரம் பகுதிகளில் வைரிசெட்டிபாளையம், வளையப்பட்டி கோட்டப்பாளையம், விசுவாம்பாள்சமுத்திரம், பி.மேட்டூர் தங்க நகர், ரெட்டியாபட்டி, சிறு நாவலூர் முதலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் இருந்து சுமார் 6 மணி வரை மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருச்சியை ஒட்டியுள்ள கூத்தைப்பார், பத்தாள பேட்டை, கிளியூர், வாழவந்தான்கோட்டை, துவாக்குடி ஆகிய பகுதிகளில் நல்ல மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் பகுதிகளில் நேற்று மாலை காற்றுடன் மழை பெய்தது. தா.பேட்டை, காருகுடி, தும்பலம் பகுதியிலும் நேற்று மாலை பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் திருச்சியில் நிலவும் மேகக்கூட்டங்களை புகைப்படமாக வெளியிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ஏப்ரல் மற்றும் மே முதல் வாரத்தில் கடுமையான வெப்பமான நாட்களுக்குப் பிறகு திருச்சி நகரில் முதல் மழை பெய்திருக்கிறது. அவர்களுக்கு இது ஒரு ஆரம்பம் மட்டுமே.. இன்னும் 7 முதல் 10 நாட்களில் நல்ல மழை வரவிருக்கிறது என்று கூறியுள்ளார். இதனிடையே திருச்சியில் மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications