கேப்பே விடாம வெளுத்து வாங்கிய கோடை மழை.. பொள்ளாச்சியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!
கோவை: கோடை மழை பல இடங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. பொள்ளாச்சியில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இன்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

மே 17ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 8 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்தது.
அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதேபோல் திருச்சி, நீலகிரி, கரூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போன்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. பொள்ளாச்சி பகுதியில் பெய்த கனமழையால் பல்லடம், உடுமலை சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், இன்று பிற்பகல் பெய்த கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, நல்லார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஓடைகளில் காட்டாற்று வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications