மத்திய அரசு திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் வெள்ளம் வந்திருக்காது.. எவ்ளோ செலவு? கணக்கு கேட்கும் பாஜக
சென்னை: மத்திய அரசின் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் உடைப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளின் பராமரிப்புக்கு செலவிடப்பட்ட தொகை என்ன? என்பதை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் பாஜக நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
கடந்த 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. குடியிருப்பு, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கு இயல்பு நிலை திரும்பிய நிலையில், கடந்த 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த மழையால், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். இதேபோல் வெள்ளத்தால் சேதமடைந்தவற்றை சீரமைக்க மத்திய அரசிடம் இருந்து இன்னும் நிதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு இன்னும் அதை வழங்க வில்லை. மேலும் மழைக்கு முன்பு தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று அதிமுக, பாஜகவினர் விமர்சித்து இருந்தனர்.
நாராயணன் திருப்பதி விமர்சனம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மழைநீர் வடிகால் பணியை மேற்கொள்ள 4000 கோடி ரூபாய் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதேபோல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழக அரசை விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், பாஜகவின் நாராயணன் திருப்பதியும் மத்திய அரசின் திட்டத்தை சரியாக நிறைவேற்றியிருந்தால் இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள் மற்றும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக முறையாக ஏரிகள் மற்றும் குளங்களை பராமரிக்காத தமிழக அரசின் பொதுப்பணி துறையின் அலட்சியமே இந்நிலைக்கு காரணம்.
செலவிடப்பட்ட தொகை என்ன?: மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெரும் பங்கு நிதி நீர்நிலைகளை தூர் வாருவதற்கும், பழுது பார்ப்பதற்கும் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும் செலவிடப்படுகிறது. மத்திய அரசின் திட்டத்தை முறையே நிறைவேற்றியிருந்தால் உடைப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளின் பராமரிப்புக்கு செலவிடப்பட்ட தொகை என்ன?
என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன போன்ற தரவுகளை தமிழக அரசு வெளியிட வேண்டும். இந்த திட்டங்களில் பெரும் முறைகேடுகள், ஊழல் நடை பெற்றிருக்கவும் வாய்ப்புள்ள நிலையில், வானிலை அறிக்கை சரியில்லை, உரிய நேரத்தில் எச்சரிக்கை விடப்படவில்லை என்றெல்லாம் அறிக்கை விடுவதை அமைச்சர்கள் மற்றும் @arivalayam வினர் நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications