தனி தீவான திருச்செந்தூர்.. 3 நாட்கள் கோவிலில் சிக்கி தவித்த பக்தர்கள்.. இலவச பேருந்துகள் இயக்கம்
திருச்செந்தூர்: கனமழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு தனி தீவாக மாறியது திருச்செந்தூர். 3 நாட்களாக எந்த வித வசதியும் இன்றி கோவிலில் சிக்கி தவித்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் ஆலயத்திற்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சனிக்கிழமை இரவு முதலே மழை பெய்யத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மழை விடாமல் கொட்டியது. ரயிலில் சென்ற பக்தர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே சிக்கிக்கொண்டனர். மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமையன்று 69 செமீ மழை பதிவானது. வெள்ள நீர் சுப்ரமணியசுவாமி கோவிலுக்குள் புகுந்தது. திருச்செந்தூர் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இடுப்பு அளவிற்கு தண்ணீர் கோவிலுக்குள் தேங்கியதோடு வெள்ளநீர் கடலோடு கலந்தது.
அக்கம் பக்கத்தில் இருந்து பக்தர்கள் பேருந்து மூலம் சொந்த ஊர் திரும்பிய நிலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் தங்கி விட்டனர். கோவிலில் மட்டுமல்லாது நகரம் முழுவதுமே மின்சாரம் தடைபட்டதால் உணவகங்களும் மூடப்பட்டன. இதனால் எந்த வசதியும் இன்றி பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையும், திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ரயில் தண்டவாளங்களும் நீரில் மூழ்கியதால் அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதால் பக்தர்கள் கோவிலில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள விடுதிகளில் கட்டணம் செலுத்தி தங்கினர். கடந்த மூன்று நாட்களாக விடுதியில் கட்டணம் செலுத்தி தங்கியதால் அவர்கள் கொண்டு வந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. இதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.
வயதானவர்கள்,பெண்கள் தங்கள் கை குழந்தைகளுடன் தவித்து வந்தனர். இன்று விடுதியை காலி செய்த நிலையில் ஏராளமானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சொந்த ஊர் செல்வதற்கு பணம் இல்லாமல் தவிப்பதாக பக்தர்கள் கண்ணீருடன் கூறினர். குழந்தைகளுக்கு பால் கூட எங்களால் வாங்கி கொடுக்க முடியாத அளவுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று பரிதவிப்புடன் கூறினர்.
கோவிலில் இருந்து மூன்று நேரமும் சாப்பாடு கொடுக்கிறார்கள். பிரச்சினை இல்லை. ஆனாலும் ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எங்களை ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தால் போதும். திருச்செந்தூர் கோயில் மண்டபத்தில் தங்கியிருப்பவர்களும் ஊருக்கு போக வழி இல்லாமல் தான் இருக்கிறார்கள். எங்களுக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி. ராஜபாளையம் பகுதிகளுக்கு இலவச பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டன. எங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக இலவச பேருந்துக்கு ஏற்பாடு செய்த அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications