வங்கக்கடலில் திடீரென நடந்த மாற்றம்.. கோவை டூ குமரி வரை அலர்ட்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக கோயம்புத்தூர் தொடங்கி கன்னியாகுமரி வரை கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "நேற்று (25-09-2025) காலை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, மாலை 1730 மணி அளவில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியது.

இது மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (26-09-2025) காலை, 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்.28 முதல் அக்.2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
இன்று தொடங்கி செப்.30 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இந்த தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (26-09-2025): வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (27-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications