கடும் வெயிலுக்கு இடையே மாறிய வானிலை.. டெல்லியை புரட்டி எடுத்த மழை.. ரெட் அலர்ட்.. சாலைகளில் வெள்ளம்
டெல்லி: டெல்லியில் கடும் வெயிலுக்கு இடையே மழை புரட்டி எடுத்து உள்ளது. அங்கே பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
டெல்லியில் பல இடங்களில் இதனால் தண்ணீர் தேங்கி உள்ளது. திடீர் மழை காரணமாக ஏற்பட்ட வானிலை சில விமான சேவைகளையும் பாதித்தது. பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர்

மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டு உள்ளது என்று டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சார்பாக இன்று டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. டெல்லி-என்சிஆரின் சில பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
லஜ்பத் நகர், ஆர்.கே.புரம், துவாரகா உள்ளிட்ட டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துவாரகா, ரோகினி, உத்தம் நகர், வசந்த் குஞ்ச், சாகேத் மற்றும் சத்தர்பூர் பகுதிகளில் கடுமையான அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.
நேற்று, டெல்லியின் சஃப்தர்ஜங் வானிலை நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது, இது இயல்பை விட கிட்டத்தட்ட ஒரு படி குறைவாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.8 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது, இது இயல்பை விட இரண்டு டிகிரி அதிகமாகும். இதற்கு இடையே திடீரென இன்று கணிக்க முடியாத அளவிற்கு மழை பெய்துள்ளது.
டெல்லி NCR பகுதியில் கடுமையான வானிலை நிலவும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
அதில் ,
➤ மரக்கிளைகள் முறிந்து விழுதல், அவென்யூ மரங்கள் வேரோடு சாய்தல். மரங்களிலிருந்து கிளைகள் விழும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கவனமாக இருக்கவும்.
➤ வாழை மற்றும் பப்பாளி மரங்களுக்கு சேதம் ஏற்படும். இதுபோன்ற லேசான மரங்கள் இருக்கும் பகுதிகளை தவிர்க்கவும்.
➤ கிளைகள் முறிந்து விழுவதால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளுக்கு சேதம் ஏற்படும்.
➤ பலத்த காற்று/ஆலங்கட்டி மழை பெய்யும். மொட்டைமாடி தோட்டங்கள் பாதிக்கும்.
➤ திறந்தவெளியில் ஆலங்கட்டி மழை மக்களையும் கால்நடைகளையும் காயப்படுத்தக்கூடும்.
➤ பலத்த காற்று காரணமாக பாதிக்கப்படக்கூடிய கட்டமைப்புகளுக்கு ஓரளவு சேதம் ஏற்படும். வீடுகள் ஈரப்பதமாக இருந்தால் கவனம்.
➤ மண் வீடுகள்/சுவர்கள் மற்றும் குடிசைகளுக்கு சிறிய சேதம் ஏற்படும்.
➤ தளர்வான பொருட்கள் பறக்கக்கூடும்.
➤ மோசமான நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
➤ வீட்டிற்குள் இருங்கள், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடிவிட்டு, முடிந்தால் பயணத்தைத் தவிர்க்கவும்.
➤ பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு நகருங்கள். மரங்களுக்கு அடியில் தஞ்சமடைய வேண்டாம்.
➤ கான்கிரீட் தரையில் படுக்க வேண்டாம் மற்றும் கான்கிரீட் சுவர்களுக்கு எதிராக சாய்ந்து கொள்ள வேண்டாம்.
➤ மின்/மின்னணு சாதனங்களின் இணைப்பைத் துண்டிக்கவும்.
➤நீர்நிலைகளின் அருகில் இருந்தால் உடனடியாக வெளியேறவும். மின்சாரத்தை கடத்தும் அனைத்து பொருட்களிலிருந்தும் விலகி இருங்கள் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications