இரவெல்லாம் நீலகிரியை நனைத்த அடை மழை.. ஊட்டியில் கரண்ட்டும் இல்லை.. டிராபிக் ஜாம் வேற.. ஆனாலும் குஷி
ஊட்டி: நீலகிரியில் கொட்டி வரும் கனமழையால், மாவட்ட மக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஊட்டியில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில், நேற்றிரவு முதலே மின்தடையும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் வெப்பம் தணிந்து வந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது... அதிலும் கடந்த சில வாரங்களாக, கடலோர மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் அந்தந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில்தான், சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது.. அந்த அறிவிப்பில், "மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அலர்ட்: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இங்கு 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே ஆரஞ்ச் எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்படுகிறது" என்று நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.
அதன்படியே, நீலகிரியில் நேற்று முன்தினம் மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.. அன்றைய தினம் இரவு முழுவதுமே நீலகிரியின் பல பகுதிகளிலும் மழை பொழிய தொடங்கியது. தேவாலாவில் 103 மில்லிமீட்டர், அவலாஞ்சி பகுதியில் 93 மில்லிமீட்டர், அப்பர் பவானி பகுதிகளில் 53 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.
அதேபோல் கூடலூர் மற்றும் நடுவட்டம் பகுதிகளில் 49 மில்லிமீட்டர், பந்தலூர் பகுதிகளில் 47 மில்லிமீட்டர் மழையும் பொழிந்தது.. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும், மொத்தமாக 735.30 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியிருந்தது.
கனமழை: ஆனால், வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவித்திருந்த நிலையில், நேற்று மாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிக கனமழை பொழிய துவங்கியது. குறிப்பாக, நகர்ப்பகுதியான ஊட்டியில் நேற்று மாலை முதலே மழை வெளுத்து கட்டியது.. இதனால் ஆங்காஙகே மின்தடையும் ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் பலத்த மழை பெய்த நிலையில், காலை 8 மணி வரையிலும் மின்தடை நீடித்தே காணப்படுகிறது.
பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், நீலகிரி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினமும், அதிக மழையின் காரணமாக ஊட்டி - கோத்தகிரி சாலையிலும் மரம் விழுந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.. இதற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக அந்தச் சாலையைச் சீரமைத்தனர்.
மின்தடை: அதேபோல நேற்று மாலை 7 மணியளவில், ஊட்டி நொண்டிமேடு, சவுத்விக் போன்ற பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளதால், நேற்றிரவிலிருந்தே மின்தடை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, இதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஊட்டியின் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இன்று காலையிலிருந்தே, ஊட்டி-குன்னூர் சாலையில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மீண்டும் தெரிவித்திருக்கிறது.
மழை பாதிப்பு; திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, குமரி, மாவட்டங்களுடன், நீலகிரி, கோவை மாவட்டங்களும் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது.
இதனால், இன்றைய தினமும் நீலகிரியில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிகிறது.. இந்நிலையில், கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
மகிழ்ச்சி: ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக மழை பொழிந்து வருவதால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும், கோடை மழை தங்களை ஏமாற்றிய நிலையில் தற்போது பருவ மழை தொடர்ந்து பெய்து வருவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications