நோட் பண்ணுங்க இந்த நம்பரை உடனே.. மின்சார வாரியம் தந்த அவசர அறிவிப்பு.. தென்னகத்தையே "சாய்த்த" மழை
தூத்துக்குடி: தென்மாவட்டங்களில் பலத்த மழை கொட்டிவரும் நிலையில், மின்தடையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில், மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை கொட்டிவருகிறது.. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள், தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரையோர இடங்களில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் வீடுகளுக்கும் வெள்ளம்நீர் புகுந்துள்ளது.

மூலக்கரை: திருநெல்வேலியை பொறுத்தவரை, அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 59.7 செ.மீ. மழையும், பாளையங்கோட்டை42.0 செ.மீ. மழையும, அம்பாசமுத்திரத்தில் 41.6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
மேலப்பாளையம் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கரண்ட் கட்: திசையன்விளை தாலுகாவில் கடந்த 24 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், செல்போன் இணைப்பு சேவைகளும் கிடைக்காததால் மக்கள் பெரிதும் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். கரண்ட் இல்லாததால், தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டிருக்கிறது.. குறிப்பாக பிஎஸ்என்எல் சிம் கார்டு அழைப்புகள் தடைபட்டுள்ளது. இதனால், மாவட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால், அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்பட்டால் கூட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முடியாத நிலைமையும் உருவாகியிருப்பதாக, கலங்கி சொல்கிறார்கள் அம்மக்கள். 4 மாவட்டங்களிலுமே, எங்கே பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளிக்கின்றன.. சாலைகள், தெருக்களிலும் ஆற்றில் வெள்ளம் ஓடுவதுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது..
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.. காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84.5 செ.மீ. மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் 66.9 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 60.70 செ.மீ. மழை பெய்துள்ளது.

நீடித்து வரும் கனமழை எதிரொலியாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுதாதாரத்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது.. அவசர கால மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், நிவாரண முகாம்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியிருக்கிறது.
அவசர எண்: இந்நிலையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் உட்பட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த மின்நுகர்வோர், தங்களின் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் அல்லது மின்சார பயன்பாட்டை தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கும் நிலைமை ஏற்படும். அதனால், நுகர்வோர்கள் தங்களின் அவசர உதவிக்கு மின்னகத்தின் 94987 94987 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications