சென்னையில் கொட்டிய கனமழை! தரையிறங்க முடியாமல்.. வானத்தில் வட்டமடித்த விமானங்கள்!
சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக விமான சேவையில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானங்களும், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக சென்றிருக்கின்றன.
வங்கக்கடலில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படியே நேற்றிரவு சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து எடுத்தது.

இதன் காரணமாக டெல்லி, கவுகாத்தி, கோவை, மும்பை, அபுதாபி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து சேர வேண்டிய விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் தவித்தன. அதேபோல.. சென்னையிலிருந்து கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. இப்படியாக 15 விமான சேவைகள் தாமதமடைந்தன.
வானிலை நிலவரம்
இந்நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "30-07-2026: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
31-07-2026: கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
01-08-2026: கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
02-08-2026 முதல் 04-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
இன்று (30-07-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
