தீபாவளி பட்டாசு பத்திரம்! சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு! 20 ஆண்டு டேட்டாவுடன் வந்த வெதர்மேன்
சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினம் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். அத்துடன் கடந்த 20 ஆண்டுகளில் எந்தெந்த தீபாவளிக்கு மழை பெய்தது என்பது குறித்தும் அவர் டேட்டா கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு தீபாவளிக்கு கனமழை பெய்யுமா? அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளிக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்பிருக்கிறது. தமிழக கடலோரத்தில் சரியான இடத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அக்டோபர் 17ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை வடதமிழகம், தெற்கு ஆந்திரம் ஆகிய பகுதிகளில் நிச்சயம் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
தீபாவளி பண்டிகை
கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகையின் போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 30 மி.மீ.க்கு மேல் மழை பெய்தது எப்போது என்பதை பார்க்கலாம். கடந்த 2011 ஆம் ஆண்டு மட்டும் சென்னையில் கனமழை பெய்து தீபாவளி பண்டிகையை பாதித்தது.
20 ஆண்டுகளில் வறண்ட வானிலை
அதை தவிர கடந்த 20 ஆண்டுகளில் தீபாவளி அன்று வறண்ட வானிலையே இருந்தது. அல்லது எங்காவது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2023, நவம்பர் 12ஆம் தேதி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 24, 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4, 2020 ஆம் ஆண்டு நவம்பர் 14, 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி, 2018ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி , 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 18, 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி , 2015 ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி, 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதிகளில் மழையே இல்லாத தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
மழை இல்லை
2011ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி கனமழை பெய்தது, 2010 ஆம் ஆண்டு நவம்பர் 5, 2009ஆம் ஆண்டு அக்டோபர் 16, 2008ஆம் ஆண்டு அக்டோபர் 28, 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, 2005 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, 2004-ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதிகளில் மழையே இல்லாமல் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகைக்கு மழை பெய்தால் மக்கள் பட்டாசு வெடிக்க முடியாமல் அவதிப்படுவர் என்பதால்தான் தீபாவளி பண்டிகைக்கு மழை இல்லாமல் இருக்க வேண்டும் என மக்கள் நினைப்பார்கள். அது போல் மழையால் பட்டாசு வியாபாரமும் பாதிக்கப்படும். கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபாவளிக்கு மழை பெய்யுமா என ஒன் இந்தியா சார்பாக வெதர்மேனிடம் கேட்ட போது, மழை பெய்யுமா இல்லையா என்பதை இப்போது கணிக்க இயலாது, அக்டோபர் மாதம் பிறந்து சில நாட்கள் போகட்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications