விடாத மழை.. இன்னைக்கும் 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும், சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. நேற்றும் கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இன்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

இன்று 7 மாவட்டங்களில் கனமழை கொட்டும்
இந்த நிலையில் தான் இன்று திங்கட்கிழமை கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியிருக்கிறது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று திங்கட்கிழமை தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பொங்கல் அன்று மழைக்கு சான்ஸ் இல்லை
நாளை செவ்வாய்க்கிழமை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14-01-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15-01-2026 முதல் 18-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை
12-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 13-01-2026 முதல் 16-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பாகவும். இயல்பை விட குறையவாகவும் இருக்கக்கூடும்.
சென்னையில் மழை பெய்யும்
சென்னையில் இன்று (12-01-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (13-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு (செமீ):
* ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 7,
* காக்காச்சி (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி) தலா 5.
* குன்னூர் PTO (நீலகிரி), கோடநாடு (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), குன்னூர் AWS (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) தலா 4.
* கேத்தி (நீலகிரி), பர்வியார் (நீலகிரி), கொடைக்கானல் படரு குழாம் (திண்டுக்கல்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி) தலா 3.
* கின்னக்கோரை (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி). வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்). கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), கெத்தை (நீலகிரி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 12-01-2026 முதல் 14-01-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications