தென் மாவட்டங்களை மிரட்டும் பேய் மழை.. 4 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கடந்த 15 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக மேற்கண்ட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதன்படியே, நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகாலை பெய்ய ஆரம்பித்த மழை தொடர்ந்து நிற்காமல் 15 மணி நேரமாக மழை பெய்து வருகிறது.

மேக வெடிப்பு போல கொட்டி தீர்த்து வரும் மழையால், சென்னையில் பெய்த மழையே அப்படியே நினைத்து பார்க்க வைப்பதாக இருக்கிறது என தென் மாவட்ட மக்கள் கூறும் அளவுக்கு பேய் மழை பெய்து வருகிறது. இந்த மழை நாளையும் தொடரும் என்றும் மேற்கண்ட 4 மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் இந்த மழையால் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சிவ்தாஸ் மீனா ஆலோசனை: தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்கள் மழை காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. கனமழை பெய்து வருவதால் பேரிடர் மீட்புக்குழுக்கள் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன. இன்று நள்ளிரவுக்குள் மழை பாதிப்புக்குள்ளான இடங்களுக்குச் சென்று, மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். 4 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பப்பட்டுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.
பள்ளி, கல்லூரி விடுமுறை: இதனிடையே, தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் தூத்துக்குடியிலும் அதிக மழை பெய்து வருகிறது. தென்காசி பகுதியில் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அருவி நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நெல்லையில் அதிக மழை பெய்து வருவதால் தாமிரபரணி, பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நெல்லையில் சொரிமுத்து அய்யனார் கோயில், அகஸ்தியர் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை அதிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை 18ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications