நெல்லை உள்பட தென் மாவட்டங்களில் இந்த 2 நாட்கள்.. வெளுக்கப் போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. லேட்டாக பருவமழை தொடங்கினாலும், சென்னை, விழுப்புரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அடுத்தடுத்து கனமழை பெய்தது. இதனால் வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழையால் தமிழகத்திற்கு அதிக மழை கிடைத்தது. நேற்றுடன் வடகிழக்கு பருவமழை முடிவடைந்தது.

எனினும் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் வரும் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும். இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications