புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த அளவிற்கு பாதிப்பு இருக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த விளக்கம்!
சென்னை: அக்டோபர் 26ஆம் தேதி உருவாகும் புயலால் தமிழ்நட்டிற்கு எந்த அளவிற்கு பாதிப்பு இருக்கும் என்று வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். புயல் உருவானி வடக்கு ஆந்திரா பக்கமாக நகர்ந்தால், தமிழ்நாட்டில் சுத்தமாக மழை இருக்காது என்று கூறிய வெதர்மேன் பிரதீப் ஜான், சிறிய இடைவெளிக்கு பின் நவம்பரில் மழை தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அக்டோபர் 15ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் சூழலில், வரும் நாட்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 25ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, அக்டோபர் 26ல் புயதாக உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு அர்னாப் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் தமிழ்நாட்டில் ஏற்படும் தாக்கம் குறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் பேசுகையில், பருவமழையை பொறுத்தவரை அக்டோபர் மாதம் தொடக்கத்தில் நெகட்டிவாக இருந்தோம். ஆனால் இப்போது 20% அதிகமாக சென்றுவிட்டோம். அடுத்த 3 நாட்களுக்கு மழையின் தாக்கல் இருப்பதை பார்க்க முடியும்.
இன்று நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். வங்கக்கடல் மற்றும் அந்தமான் அருகில் இருக்கும் மத்தியக் கடலில் காற்றழுத்த பகுதி இருக்கிறது. வங்கக்கடலில் இருக்கும் காற்றழுத்த பகுதி வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும். இது தமிழ்நாட்டை விட்டு வட ஆந்திரா பக்கம் செல்லக்கூடும்.
அப்படி சென்றால், தமிழ்நாட்டிற்கு சுத்தமாக மழை இருக்காது. இதனால் புயல் உருவான பின் தமிழ்நாட்டில் மழை குறைந்துவிடும். காற்றழுத்த பகுதி மூலமாக நல்ல மழை கிடைத்து வருகிறது. எல் நினோ ஆண்டுகளில் வங்கக் கடலில் புயல் குறைவாகவே வரும். அதனால் இரு காற்றழுத்த பகுதியில் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கிறது. இதனால் அக்டோபர் 26 வரை கனமழை இருக்கலாம்.
எல் நினோ ஆண்டுகளில் கடுமையான வெயில் இருப்பதை பார்த்துள்ளோம். அதனால் எல் நினோவில் மழை பெய்வதை வரவேற்க வேண்டும். வரும் நாட்களில் பெய்யும் மழை தமிழ்நாட்டிற்கு தேவை. தென் மாவட்டங்களில் நல்ல நீர் வரத்து இருப்பதை பார்க்கிறோம். மதுரை, விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் 10 செ.மீ.க்கும் அதிக மழை பெய்வதை பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
