இன்னும் ஆட்டம் முடியல.. 12 ஆம் தேதி மிக கனமழை வெளுக்கப்போகுது.. இந்திய வானிலை மையம் அலர்ட்!
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் டிசம்பர் 12 ஆம் தேதி தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது வரும் 12ஆம் தேதி இலங்கை - தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் (டிசம்பர் 8 & 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 ஆம் தேதி முதல் கனமழையும், 12 ஆம் தேதி மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10 கனமழை: வரும் டிசம்பர் 10-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், வரும் 11 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 12 மிக கனமழை - ரெட் அலர்ட்: வரும் 12 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 13 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழக மீனவர்கள் வரும் 11 ஆம் தேதி வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications