மதுரை + 3 மாவட்டங்களில்.. அடுத்த 2 மணி நேரத்தில் பிச்சிக்கிட்டு கொட்டப்போகும் மழை! வெதர் அப்டேட்
சென்னை: தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி இறுதியிலேயே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நகரத்திலும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்த நிலையில், இன்று மட்டும் 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருக்கிறது.

ஈரோட்டில்-104
சேலம், திருச்சி-103
மதுரை நகர், மதுரை விமான நிலையம், நாமக்கல்-102
வேலூர், தஞ்சை, கோவை-101
திருப்பத்தூர், திருத்தணியில்-100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று 9 நகரங்களில் 100 டிகிரியை வெயில் கடந்திருந்த நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிவிப்பை பொறுத்த அளவில், "தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல ஏப்.3ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி வரும் 5ம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வானிலை மையம் கூறியிருந்ததை போல, தென்காசி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலும் இன்று மழை சற்றே தலைக்காடடி இருக்கிறது. இந்நிலையில், இன்னும் 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
அதாவது தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இரவு 11 மணியளவில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்திருக்கிறது. இதனால் இம்மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications