வெப்ப அலை தொடங்கியாச்சு.. ஜூன் வரைக்கும் இப்படித்தான் இருக்குமாம்! வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: நாடு முழுவதும் ஏப்ரல் தொடங்கி ஜூன் மாதம் வரை வெப்பம் உக்கிரமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
வழக்கமாக மார்ச் மாதத்தில் கோடை காலம் தொடங்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே கோடை பெரும்பாலான மாநிலங்களில் தொடங்கி விட்டது. குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. அதேபோல தென்னிந்திய மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், ஏப்ரல் தொடங்கி ஜூன் மாதம் வரை வெப்பம் உக்கிரமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

இது குறித்த அறிவிப்பில், "நாட்டின் மத்திய மற்றும் மேற்கு பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மேற்கு இமயமலைப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வடக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கும். இந்த முறை 10-20 நாட்கள் வரை பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும்.
குஜராத், மத்திய மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலைகள் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தை பொறுத்த அளவில் தென்னிந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும்" என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியுள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், போதுமான அளவுக்கு பருவமழை பெய்யாததாலும், தென்னிந்தியாவில் பெரும்பாலான நீர் நிலைகள் வேகமாக வறண்டுவிட்டன. கேரளாவின் அணைகளிலிருந்த நீரின் அளவு குறைந்ததால், மின்சாரம் தயாரிக்க முடியாமல் அம்மாநிலம் சிக்கலை எதிர்கொண்டது.
அதேபோல, கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை போதுமான அளவு இல்லாததால் அம்மாநிலத்தின் முக்கிய அணைகளான கபினி சாகர், கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகளின் நீர் மட்டம் குறைந்தது. எனவே அங்கிருந்து மேட்டூருக்கு வர வேண்டிய நீரின் அளவும் சட்டென குறைந்தது. மேடடூர் அணையின் நீர் பாசனத்தை நம்பிதான் டெல்டா மாவட்டம் இருக்கிறது. இப்படி இருக்கையில் மேட்டூரிலேயே தண்ணீர் இல்லாததால் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் கடந்த ஆண்டு கடும் பாதிப்பை எதிர்கொண்டன.
இந்த ஆண்டும் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது, தென்னிந்தியா மட்டுமல்லாது, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களை கவலையடைய செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications