தட்டி தூக்கிய மழை.. திறந்து ஒரே நாளில் மூடப்பட்ட கோவை குற்றாலம்
கோவை: எல்நினோ காரணமாக உலகம் முழுவதுமே இந்தாண்டு பருவநிலை மாறுபாடு பிரச்சனை பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையில்
எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. காவிரியிலும் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுக்கிறது. கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கோவை குற்றாலம் நேற்று திறக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து வேகமாக முன்னேறும் மாவட்டமாக கோவை உள்ளது. கல்வி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கோவை வளர்ச்சியடைந்து வருகிறது. கோவையின் கிளைமேட் மிகவும் ஸ்பெஷலானது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால் கோவையின் தட்பவெப்பம் இதமாக இருக்கும். கோவையை சுற்றி ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.
கோவையின் மற்றொரு கூடுதல் சிறப்பு சிறுவாணி தண்ணீர். கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகருக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட சாடிவயல் அருகே கோவை குற்றாலம் உள்ளது. அதற்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள். சிறிய அருவியாக இருந்தாலும் அடர்ந்த காடும், சில்லென்ற காற்றும், உறைய வைக்கும் நீரும் அற்புதமான அனுபவத்தை கொடுக்கும்.
தென்மேற்கு பருவமழையில் கோவை மற்றும் கேரளாவுக்கு போதுமான மழை கிடைக்கவில்லை. இதனால் கோவை குற்றாலத்துக்கான நீர் வரத்து குறைவாக இருந்தது. கடந்த சில வாரங்களாக கோவை மற்றும் கேரளாவில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. கனமழை, வெள்ளம் காரணமாக கடந்த (25.8.2026) செவ்வாய்க்கிழமை முதல் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.
மழை சற்று குறைந்ததால் கோவை குற்றாலம் நேற்று (28.8.2026) தேதி திறக்கப்பட்டது. ஆனால் நேற்று முதல் கோவை, கேரளாவில் மீண்டும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் இன்று (29.8.2026) தற்காலிகமாக மூடப்படுகிறது என்று வனத்துறை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
