"வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!" அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உட்பட பல இடங்களில் கனமழை!
சென்னை: தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடைக் காலத்தில் வழக்கத்திற்கு மாறாக நல்ல மழை கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல இடங்களில் மழை பெய்திருந்த நிலையில், இது வரும் நாட்களிலும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தென் மாவட்டங்களுக்கும் நாளைய தினம் கிழக்கு மாவட்டங்களுக்கும் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மே மாதம் தமிழகத்தில் வெப்பம் படுத்தி எடுக்கும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக மழை கொட்டி வருகிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களிலும் இந்த கிளைமேட் தொடரும் என்றே வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை மையம்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கிமீ உயரம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகக்கூடும்.
சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை, தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
கொட்டும் மழை
இதனால் இன்றைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
நாளைய தினம் தமிழகம் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்கள்
வரும் மே 13ம் தேதி தமிழகம் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மே 14ம் தேதி தமிழகம் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications