வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த ஒரு வாரத்துக்கு மழை தான்! வானிலை மையம்
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இதனால் தமிழகத்தில் இன்று முதல் வரும் 7 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை வெளுத்து வாங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் மழை சற்று குறைந்து வெயில் அடித்து வருகிறது. இன்றும் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் தான் வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இன்று முதல் வரும் 7 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று (31-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (01-11-2025) காலை 05.30 மணி அளவில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில்
இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேலும், கிழக்கு-வடகிழக்கு திசையில், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக, தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மஹாராஷ்ட்ரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறையக்கூடும்.
தெற்கு மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும்
* கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-11-2025 முதல் 03-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 04-11-2025 மற்றும் 05-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 06-11-2025 மற்றும் 07-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் கிளைமேட் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (01-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (02-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 01-11-2025 முதல் 05-11-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
01-11-2025: மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
02-11-2025: மத்தியகிழக்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03-11-2025: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04-11-2025 மற்றும் 05-11-2025: மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
01-11-2025: வடக்கு கொங்கன் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு - வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
02-11-2025: குஜராத் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03-11-2025 மற்றும் 05-11-2025: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications