அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் அடித்து பெய்யப் போகும் மழை.. சென்னையில் இன்று மழைக்கு சான்ஸ்
சென்னை: கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடகிழக்கு-தெற்கு குஜராத் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும், தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இன்று மற்றும் நாளை சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்த நிலையில் வரும் 25 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை
நேற்று (18-08-2025) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 17.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் நிலவியது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (19-08-2025), அதிகாலை தெற்கு ஓரிசா கடற்கரை பகுதிகளில், கோபால்பூருக்கு அருகே கரையை கடந்தது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08.30 மணி அளவில் தெற்கு ஒரிசா உட்பகுதிகளில் நிலவுகிறது. இது, மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுக்குறையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிகிறது. வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடகிழக்கு-தெற்கு குஜராத் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
பலத்த தரைக்காற்று வீச வாய்ப்பு
* 19-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
* 20-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25 ஆம் தேதி வரை மழை தான்
* 21-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 22-08-2025 மற்றும் 23-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 24-08-2025 மற்றும் 25-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்றும் நாளையும்
சென்னையில், இன்று (19-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (20-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும்,குறைந்தபட்ச வெப்பநிலை 27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
* தமிழக கடலோரப்பகுதிகள்: 19-08-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* 20-08-2025 மற்றும் 21-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
பதிவான மழை அளவு செமீ:
* அவலாஞ்சி (நீலகிரி) 9,
* தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி) தலா 8.
* மேல் பவானி (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 5,
* மேல் கூடலூர் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 4,
* விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்).
* வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 3,
* கிளன்மார்கன் (நீலகிரி) 3, எமரால்டு (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), குந்தா பாலம் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்). அடவிநயினார் அணை (தென்காசி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கேத்தி (நீலகிரி) தலா 2 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications