வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தென் மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது மழை.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதே சமயம், நாளை முதல் 30 ஆம் தேதி தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், 31 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் மீண்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. - வானிலை மையம்

இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்திலேயே கனமழை வெளுத்து வாங்கியது. பின்னர் மழை குறைந்தது. இறுதியில் டிசம்பர் மாத தொடக்கத்தில் டிட்வா புயலால் கனமழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு பெரிய அளவில் மழை இல்லை. கடந்த 19 ஆம் தேதி பருவமழை விடைபெற்றது.
தமிழகத்தை விட்டு வடகிழக்கு பருவமழை விலகிய நிலையிலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி புத்தாண்டு தினத்தில் மழை பெய்தது. தொடர்ந்து கடந்த 4 நாட்களாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் தமிழகத்தின் (தென் மாவட்டங்கள்) ஓரிரு இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 31 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும், நாளையும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். 29, 30 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் அதிகபட்சமாக 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 5 சென்டி மீட்டர், ஆவடி, வடபழனி, மணலி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளிலும் திருவாரூர் மாவட்டத்திலும் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications