வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த இரண்டு நாட்களுக்கு சம்பவம் இருக்கு
சென்னை: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், அடுத்த 2 நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் எனவும், வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் மூலம் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும்.
பருவமழை காலங்களில் புயல்கள் உருவாகி மழைப்பொழிவை கொடுக்கும். அந்த வகையில், தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதாவது கடல் பரப்பில் வெப்பம் அதிகரிக்கும்போது, நீர் ஆவியாகி மேகமாக மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இது தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.

கடலில் வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக நீராவி இருக்கும், எனவே இந்த பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் பயணித்து மேகங்களை அதிகமாக சேர்த்து புயலாக உருவாகிறது.
நடப்பாண்டில் தற்போது வரை எந்த புயலும் தமிழகத்தை தாக்கவில்லை. இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியும் கூட, ஜார்க்கண்ட் நோக்கி நகரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை இது புயலாக உருவாகும் பட்சத்தில் தமிழகத்தில் பருவமழை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அதாவது, புயல் சுற்று பகுதியில் உள்ள ஈரப்பதத்தை இழுத்துக்கொள்வதால், அது கடந்து செல்லும் இடத்தில் மட்டுமே மழை இருக்கும். அந்த பகுதியை சுற்றியுள்ள பல நூறு கி.மீ தொலைவுக்கு வானிலை வறட்சியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை 64% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 204.4 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 335.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1158.5 மி.மீ, கோவையில் 845.4 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 50.4 மி.மீ, நாகப்பட்டினத்தில் 91.7 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -39 சதவிகிதம் குறைவாகும். மற்ற மாவட்டங்களை விட ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்திருக்கிறது.
இன்று தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூருக்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications