மழையெல்லாம் முடிஞ்சது.. இனி வெயில் பட்டையை கிளப்பும்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் திடீரென மழை பெய்திருந்தது. இந்நிலையில் இனி ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பில்லை என்றும், அடுத்தடுத்த நாட்களில் வெயில் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 16 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 17 முதல் 19 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த வரை, 14 தொடங்கி 17 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும். 18ம் தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், 14ம் தேதி தொடங்கி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும். 15ம் தேதி முதல் 18 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.
14 மற்றும் 15ம் தேதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, வடதமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். அதேபோல 16 மற்றும் 17ம் தேதி அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (14-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (15-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை வேலூரில் 38.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் 5-7° செல்சியஸ் மற்றும் ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஏனைய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33 - 39° செல்சியஸ், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34-35° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-35° செல்சியஸ் பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications