மேட்டூர் அணை அடியோடு மாறியது.. ஒரு நாளில் நடந்த மேஜிக்.. காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
சேலம்: கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் காரணத்தால் அங்குள்ள கபினி அணை நிரம்பி உள்ளது. இதனால் உபரி நீர் அப்படியே காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 23,989 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஒரே நாளில் மேட்டூர் அணை 3 அடி உயர்ந்து 50 அடியை தாண்டி உள்ளது
தென்மேற்கு பருவ மழை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவின் குடகு மாவட்டம், கேரளாவின் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தற்போதைய நிலையில் கபினி அணை மட்டும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. காவிரியில் உள்ள முக்கிய அணையான கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 36,674 கனஅடியாக அதிகரித்தது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 110.60 அடியை எட்டியது. தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால், இன்னும் சில நாளில் கேஆர்எஸ் அணை முழுமையாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் கபினி அணை முழுமையாக நிரம்பி விட்டது. இதனால் கபினி அணையில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்ததால், இரவு 8 மணி அளவில் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கபிலா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம்கரைபுரண்டு ஓடுகிறது. அங்கு நடைபாதைக்கும் மேலே தண்ணீர் செல்கிறது.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த 16-ந் தேதி 44.62 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 50.03 அடியாக அதிகரித்துள்ளது. வெறும் 3 நாளில் 6 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 21,520கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 23,989 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல் நேற்று காலை 46.80அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 50.03 அடியாக அதிகரித்துள்ளது. வெறும் ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3.23 அடி உயர்ந்திருக்கிறது. இப்படியே தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் விரைவில் முழு கொள்ளவை எட்டும் என தெரிகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக செட்டிபட்டி கோட்டையூர் பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம் நெருப்பூர் நாகமரை ஒட்டனூர் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications